30,000 பேருக்கு வேலை: ஹெச்.சி.எல்.!


ஹெச்.சி.எல். நிறுவனம் இந்த ஆண்டில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 4ஆவது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைமை மனிதவளத் துறை அதிகாரி விவி.அப்பாராவ், இதுகுறித்து தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “பொறியாளர்களை அதிகளவில் இந்த நிதியாண்டில் நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம். அவுட்சோர்ஸ் தொழில்நுட்பப் பணிகள் மற்றும் விநியோகச் சேவைகளுக்கு அதிகளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்த நிதியாண்டில் 25,000 முதல் 30,000 பேர் வரையில் நியமிக்கப்படுவார்கள். அனுபவம் உடையவர்கள் மற்றும் புதியவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்” என்றார். தற்போது இந்த நிறுவனத்தில் 1,27,875 பேர் பணிபுரிந்து வருகின்றனர். நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 3,854 பேர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மற்றொரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, புதிய ஊழியர்களுக்கான மாதாந்தர ஊதியத்தை அதிகரித்துள்ளது. இதுகுறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைவரும் தலைமை மனிதவள அதிகாரியுமான சவுரப் கோவில் டி.என்.என். ஊடகத்திடம் பேசுகையில், “புதிய நியமனங்களின் தரத்தை மேம்படுத்த கோடிங் சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளோம். தேசிய அளவிலான திறன் சோதனையையும் புதிய நியமனங்களுக்கு நடத்தத் திட்டமிட்டு வருகிறோம். கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 முதல் 30 விழுக்காடு கூடுதலாக ஆட்களை நியமித்து வருகிறோம். புதிய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும்” என்றார்.

0 comments:

Post a Comment