அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதனை ஒரே நேரத்தில் 5.50 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று, பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 5.50 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ம் தேதி, அரசியலமைப்பு சட்ட தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு நேற்று அரசியலமைப்பு சட்ட தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியன இணைந்து நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்புக்கு ஏற்பாடு செய்திருந்தன.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 2,154 பள்ளிகளிலும், 112 தனியார் பள்ளிகள், 145 கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும், 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் அரசியலமைப்பு உறுதிமொழியை ஏற்று சாதனை படைத்தனர். திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி கலந்து கொண்டார்.
இதில் பயிற்சி கலெக்டர் பிரதாப், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்றனர். அதேபோல், கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை சார்பு நீதிபதி ராம் முன்னிலையில், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் உறுதிமொழி ஏற்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ பதிவை இணையதள முகவரி மூலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்தனர்.

0 comments:

Post a Comment