28/03/2016
""வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்ற
நினைப்பவர்கள் தப்பிக்க முடியாது'' என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அந்த
மாநிலத்தில் பிரதமர் மோடி இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரம்
மேற்கொண்டார். ரங்கபாராவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர்
பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக் காலத்தில்
செல்வந்தர்களின் நலனுக்காகவே வங்கிகளைத் திறந்தது. வங்கிகளின் வாயிலாக
பொதுமக்களின் பணத்தை செல்வந்தர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அதற்கு
காங்கிரஸ் கட்சியும் துணைபோனது. (தொழிலதிபர் விஜய் மல்லையா விவகாரத்தைக்
குறிப்பிடுகிறார்).
ஆனால், எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு,
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றி வருவோரிடம் இருந்து கடனை
வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதனால், கடன்
வாங்கி மோசடி செய்தவர்கள், சிறையில் தள்ளப்படுவோம் என்ற பீதியில் உள்ளனர்.
வங்கிகளில் இருந்து கடனாகக் கொடுக்கப்பட்ட பணம்
முழுவதும், இந்த நாட்டில் உள்ள ஏழை மக்களின் பணமாகும். வங்கிகளில் கடன்
வாங்கியவர்களிடம் இருந்து ஒரு பைசா பாக்கி இல்லாமல் வசூலிக்கப்பட்டுவிடும்.
கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த நீங்கள்
(காங்கிரஸ்), ஏழை மக்களிடம் கொள்ளையடித்து அனுபவித்து வந்தீர்கள், அது,
இனிமேல் நடக்காது. எனவே, என்னுடன் நீங்கள் போராட வேண்டியிருக்கும்.
கடந்த 60 ஆண்டுகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான
மக்கள், வங்கிகளின் வாசலைக் கூட எட்டிப் பார்க்கவில்லை. ஆனால், கடைக்கோடி
ஏழை மக்களுக்கும் வங்கிச் சேவை வசதி கிடைக்கும வகையில், எனது ஆட்சியில்
அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வங்கிகள் கடனுக்கு அதிக வட்டி விதித்து ஏழைகளின்
ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்த நிலை மாறி, தற்போது முத்ரா வங்கி
திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்
வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு, மத்தியிலும், அஸ்ஸாம் மாநிலத்திலும் 10
ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தபோது, நிதியைக் கையாளும்
அதிகாரம் அவர்களிடமே இருந்தது. எனினும், இந்த மாநில மக்களுக்கு அவர்கள்
எதுவும் செய்துவிடவில்லை.
எனவே, காங்கிரஸ் கட்சிக்கும், முதல்வர் தருண்
கோகோய்க்கும், வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி
கொடுக்க வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment