New regulations for claiming P.F amount_
பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்க, புதிய நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் படி, பணியில் இருந்து விலகியவர்கள் தங்கள் முழுத்தொகையையும் எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓய்வு கால திட்டமான பி.எப்.,ல் ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில், 12
சதவீதம் மாதந்தோறும் செலுத்த வேண்டும். அதே அளவு தொகை, நிறுவனம்
சார்பில் செலுத்தப்படும். நிறுவனம் செலுத்தும் தொகையில் ஒரு பங்கு,
ஓய்வு நிதி திட்டமான இ.பி.எஸ்.,ல் சேர்க்கப்படும்.பி.எப்., தொகையை,
இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டும் தான் பகுதி
அளவு எடுக்க முடியும். ஊழியர் வேலையிலிருந்து விலகும் பட்சத்தில்,
தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் வேலையில் இல்லாமல் இருந்தால், தன்
கணக்கில் உள்ள முழுத்தொகையையும் எடுத்துக் கொள்ளலாம்; ஆனால் இதில்
மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி, 10ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை படி,
இரண்டு மாதங்களுக்கு மேல் ஊழியர்கள் வேலையில் இல்லாமல் இருந்தாலும்
கூட முழுத் தொகையையும் எடுக்க முடியாது. அவர்கள் பங்களிப்பு மற்றும்
அதற்கான வட்டி மட்டுமே பெற முடியும். நிறுவனம் செலுத்திய தொகை அவரது
கணக்கிலேயே நீடிக்கும். அவர், ஓய்வு பெறும் வயதில் தான் அந்த தொகையை பெற
முடியும்.மேலும் பணம் எடுக்கும் வயது, 55லிருந்து, 58 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இடைப்பட்ட காலத்தில், வேலையில் இருந்து
விலகிவிட்டால் கூட முழுத் தொகையையும் எடுக்க முடியாது. ஆனால்,
திருமணம் அல்லது குழந்தை பிறப்பு காரணமாக பணியை விட்டுச் செல்லும் பெண்
ஊழியர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
பணி மாறும் நிலையில், பி.எப்., கணக்கை எளிதாக தொடரும் வகையில் நிரந்தர
கணக்கு எண் வசதி அமலுக்கு வந்துவிட்டதால், ஓய்வு காலம் வரை பி.எப்.,
பின் ஒரு பகுதியை சேமிக்கும் வகையில், இந்த புதிய விதிமுறை கொண்டு
வரப்பட்டுள்ளது.எனினும் வேலையை விட்ட பின், புதிய வேலைக்கு சேராமல்
இருப்பவர்கள் விஷயத்தில் இது புதிய சிக்கலை ஏற்படுத்தலாம். அவர்கள்
கணக்கில் பணம் செலுத்தப்படாததால், மூன்று ஆண்டுகளில் இயங்காத
கணக்காக கருதப்பட்டு வட்டி நிறுத்தப்படும். இது தொடர்பாக, அரசு
தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment