17/04/2016
தமிழகம் முழுவதும் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தபால்
வாக்குச்சீட்டுகளை விரைவாகவும், 100 சதவீதம் அனுப்பத் தேர்தல் ஆணையம்
நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் பணிக்கு செல்லும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள்
அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேர்தலின்போது வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை
சரிபார்ப்பது, வாக்காளர்களின் விரலில் மை வைப்பது உள்ளிட்ட பணிகளில்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபடுவர்.
அரசு ஊழியர்களின் விவரங்கள் ஒரு மாதத்துக்கு முன்பே சேகரிக்கப்பட்டு தேர்தல் துறையால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.
தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க அவரவர்
வீட்டுக்கே வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணிக்கு
செல்வதற்கு முன்பாக விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்து, அதனுடன் உள்ள
உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில்
உள்ள பெட்டியில் போட வேண்டும்.
இந்த நிலையில் கடந்த இரு தேர்தல்களில் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள்
காலதாமதமாகக் கிடைத்ததால் பெரும்பாலான ஆசிரியர்கள் வாக்களிக்க முடியாத நிலை
உருவானது.
35 சதவீதம் பேருக்கு தபால் வாக்குகள் வரவில்லை என்று கூறப்பட்டது.
மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் கல்வித் துறை அலுவலர்களிடம் முறையிட்டும்
எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் கடந்த தேர்தல்களில் வாக்குப் பதிவு
சதவீதம் குறைந்தது. இந்தத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை எட்டும்
வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி
வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களாக எங்களுக்கு தேர்தல் பணிக்காக 3 நாள்கள் பயிற்சி வழங்கப்படுகிறது.
கடைசிப் பயிற்சி நாளான்று, தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணி நியமன ஆணைகள்
வழங்கப்படும். அதேநேரத்தில் தபால் வாக்குச்சீட்டு கிடைத்து விட்டதா என்பது
குறித்து உறுதி செய்து அதன் பின்னர், தேர்தல் பணி நியமன ஆணைகளை
வழங்கவேண்டும் என்றனர்.
0 comments:
Post a Comment