படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி

*பெரம்பலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும், பிளஸ் 2 மாணவி ஒருவர், 6ம் வகுப்பு இரண்டாம் பருவ ஆங்கில பாடப்புத்தகத்தில், இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்

*மதுரை, மேலதிருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பையா - சந்தனம் தம்பதியின் மகள் ராஜமாணிக்கம்,17. விளையாட்டு மீது, மிகுந்த ஆர்வமுள்ள இவர், டி.ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை படித்தபோது, தடகளம், கால்பந்து மற்றும் டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்றார்.இதில், டேக்வாண்டோ போட்டியில் அதிக கவனம் செலுத்தினார்

*இதற்கு தனியாக பயிற்சி பெற, குடும்பத்தில் பணவசதி இல்லை. இதனால், எஸ்.எஸ்.எல்.சி., முடித்த பின், பெரம்பலுாரில் உள்ள பள்ளி மாணவியருக்கான விளையாட்டு விடுதியில் சேர்ந்தார்.அங்குள்ள டேக்வாண்டோ பயிற்சியாளர்களின் உதவியோடு நன்கு பயிற்சி பெற்றார்

*இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், கேரள மாநிலம் கண்ணுாரில் நடந்த பள்ளி மாணவியருக்கான, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்றார். இதில், 40 முதல், 42 கிலோ எடை பிரிவில், விளையாடி மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தார்

*இதையடுத்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில், தமிழக அரசு வழங்கும் இலவச பாட புத்தகத்தில், டேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த வீராங்கனைகளின் புகைப்படத்தை பெயருடன் வெளியிட, தமிழ்நாடு பாடநுால் வெளியிட்டு கழகம் முடிவு செய்தது.

*இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், பள்ளிகளில் 6ம் வகுப்புக்கு வழங்கப்பட்ட இரண்டாம் பருவ ஆங்கில பாடப்புத்தக்கத்தில், 109ம் பக்கத்தில், டேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த வீராங்கனைகளின் போட்டோக்கள் வரிசையில், பெரம்பலுார் மாணவி ராஜமாணிக்கம் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.இதையடுத்து, மாணவி ராஜமாணிக்கத்துக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.

*கடந்த, 16ம் தேதி சென்னையில் நடந்த விழாவில், மாணவி ராஜமாணிக்கம், தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பாராட்டு பெற்றார்.

0 comments:

Post a Comment