தமிழகத்தில் அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், இன்னமும் புத்தகங்கள் முழுமையாக கிடைக்காததால், பிளஸ் 1 மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். தமிழகத்தில் நடப்பாண்டு 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு முப்பருவ தேர்வு முறை என்பதால், முதல் பருவம் முடிந்து, தற்போது இரண்டாம் பருவத்திற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுத்தேர்வினை சந்திக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால், தேர்வுக்கு தயாராக என்ன செய்வது? என்று தெரியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும்பாதே மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புத்தகங்களை அச்சிட்டிருக்க வேண்டும். பள்ளிகள் திறந்தபோது, அறிவியல் பிரிவு உள்பட பல பாடங்களின் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. அவை படிப்படியாக குறைக்கப்பட்ட நிலையில், கலைப்பிரிவு மாணவர்களுக்கான புத்தகம் இன்னமும் முழுமையாக கிடைக்கவில்லை.
ஓரிரு பள்ளிகளில் உபரியாக இருந்த புத்தகங்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கியுள்ளனர். இதனால், பல பள்ளிகளில் பிளஸ் 1 புத்தகங்களை ஜெராக்ஸ் எடுத்து, மாணவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புத்தகமே இல்லாமல் காலாண்டு தேர்வை கடந்த நிலையில், விரைவில் அரையாண்டு தேர்வும் வரவுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனவே இனிவரும் காலங்களிலாவது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்
0 comments:
Post a Comment