அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 2016-17 ஆம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 809 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அங்கு கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தால், தற்காலிக ஏற்பாடாக பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இப்போதுகூட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் 1,474 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை மாதம் ரூ.7,500 என்ற ஊதியத்தில் தற்காலிகமாக நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால், அதில்கூட கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதுநிலை கணினி அறிவியல் ஆசிரியர் தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கின்றனர். எனவே, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்
0 comments:
Post a Comment