சென்னை பல்கலையின் ஒருங்கிணைப்பு குழுவில், ஒரு பதவிக்கு, இரண்டு பேரை
தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதால், இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது
தொடர்பாக, உயர்கல்வி செயலருக்கு எதிராக, போர்க்கொடி துாக்கியுள்ள
பேராசிரியர் மற்றும் பணியாளர் குழுவினர், இன்று கவர்னரை சந்திக்க உள்ளனர்.
சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன், ஜனவரியில் ஓய்வு பெற்றார். புதிய
துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, தற்காலிக நிர்வாககுழு
அமைக்கப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினராக...இதில், உயர்கல்வி துறை செயலர் அபூர்வா தலைமையில்,
கல்லுாரி கல்வி இயக்குனர் சேகர் மற்றும் பல்கலை பேராசிரியர் தங்கம் மேனன்
இடம் பெற்றனர். தங்கம் மேனன் ஓய்வு பெற்றதும், பொருளியல் துறை பேராசிரியர்
ஜோதி சிவஞானம் புதிய உறுப்பினராக, கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் நடந்த, மாதாந்திர சிண்டிகேட் கூட்டத்தில், 'ஒருங்கிணைப்பு
குழு உறுப்பினர் ஜோதி சிவஞானம் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் ஓய்வு பெற்ற
பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன் நியமிக்கப்படுகிறார்' என, உயர்கல்வி செயலர்
அபூர்வா தன்னிச்சையாக அறிவித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பேராசிரியர் மற்றும் பணியாளர்கள் கூறியதாவது:சிறப்பு
சிண்டிகேட் கூட்டம் கூடி, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜோதி சிவஞானம்
தேர்வானார். ஆனால், திடீரென சட்டசபை தேர்தல் வந்த நிலையில், எந்த காரணமும்
இல்லாமல், அவரை நீக்கி விட்டு, ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு எப்படி பதவி
கொடுக்கலாம்.
முறையற்ற செயல்:கல்வி நிறுவன விவகாரத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நுழைந்து
அரசியலாக்குவது, எதிர்காலத்தில் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். அதிகாரிகள்
இப்போது இப்பதவியில் இருப்பர்; பின், வேறு துறைக்கு மாற்றப்படுவர். ஆனால்,
பேராசிரியர், பணியாளர் இதே பல்கலையில் தான் இருப்பர். அவர்களிடையே
பிரச்னையை ஏற்படுத்துவது, அரசு அதிகாரிகளுக்கு முறையற்ற செயல். எனவே,
இதுதொடர்பாக, இன்று கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.
0 comments:
Post a Comment