#அறிவியல்-அறிவோம்: பட்டாசு ஓர் அறிவியல் பார்வை.

(சீ.ஹரிநாராயணன்)

பட்டாசு இல்லாத தீபாவளியா?. ஆனால், தரையில் இருந்து கிளம்பி புறப்பட்டு வானில் வர்ணஜாலம் நிகழ்த்தும் வண்ணப் பட்டாசுகள் உருவாக்கத்துக்கு பின்னால் இருக்கும் அறிவியலை அறிவீர்களா? அது பற்றி பார்ப்போம்.

சீனர்கள் தான் முதலில் பட்டாசை கண்டுபிடித்தவர்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அவர்கள் பட்டாசுகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மூங்கில் தண்டில் கரித்தூளை நிரப்பி வெடிக்க வைத்ததே உலகின் முதல் பட்டாசு. அவற்றை வெடிக்க வைப்பதன் மூலம் கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க முடியும் என சீனர்கள் நம்பினார்கள்.

நவீன வண்ணப் பட்டாசுகள் இத்தாலியில் அறிமுகமாகின. இத்தாலியர்கள்தான் பட்டாசுகளில் வெடிபொருளோடு உலோக வண்ணமூட்டிகளைச் சேர்த்து வண்ணப் பட்டாசுகளைத் தயாரித்தனர். வண்ணத்திற்காக அவர்கள் உலோக உப்புகளைப் பயன்படுத்தினார்கள்.

அன்றில் இருந்து இப்போது வரை பட்டாசு தயாரிப்பில் நவீன முறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

இப்போது வண்ணப் பட்டாசு தயாரிப்பில் ஐந்து பொருள்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

உலோக வண்ணமூட்டிகள், வெடிபொருள், வெடிபொருள் வெடிப்பதற்கான ஆக்சிஜனை வழங்கும் ஆக்ஸைடு, வண்ணங்களை அதிகம் வெளிப்படுத்த குளோரின் கலவை, இந்தப் பொருள்களை ஒன்றாக பாதுகாப்பாகச் சுற்றி வைக்க காகித அட்டை ஆகியவையே அந்த ஐந்து பொருள்கள் ஆகும்.

பட்டாசுகளில் சேர்க்கப்பட்ட உலோக வண்ணமூட்டிகளின் அளவுக்கு ஏற்பவும், குளோரின் கலவையின் அளவுக்கு ஏற்பவும் அவை வண்ணத்தையும் ஒளியையும் ஏற்படுத்துகின்றன. வண்ணமூட்டிகளாக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு உலோக உப்பிற்கும் பிரத்யேக வண்ணம் உள்ளது. பட்டாசு வெடிக்கும்போது அந்த வண்ணங்களை அவை பிரதிபலிக்கின்றன.

சிவப்பு வண்ணத்துக்கு ஸ்ட்ரோன்டியம் அல்லது லித்தியம் உலோக உப்பு பயன்படுத்தப்படுகிறது. 

ஆரஞ்சு நிறத்துக்கு கால்சியமும், 

மஞ்சள் நிறத்துக்கு சோடியமும் பயன்படுத்தப்படுகின்றன. 

பேரியம் உப்பு பச்சை வண்ணத்தையும், 

தாமிர உப்பு நீல வண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றன. 

ஊதா வண்ணத்துக்காக ஸ்ட்ரோன்டியமும் தாமிரமும் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. 

⚡சில்வர் வண்ணத்துக்கு அலுமினியம், டைட்டானியம் அல்லது மெக்னீசியம் பயன்படுத்தப்படுகிறது. 

தங்க நிறத்துக்கு இரும்பு உப்பு சேர்க்கப்படுகிறது.

உலோக வண்ணமூட்டிகள் மிகக் கவனமாக பட்டாசுகளில் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட அலை நீளம் இருக்கிறது. அந்த அளவிற்கு ஏற்ப அவை வண்ணத்தையும் ஒளியையும் வெளியிடுகின்றன.

 ஒரே பட்டாசில் பல்வேறு வண்ணமூட்டிகள் சேர்க்கப்படுவதும் உண்டு. வாணவேடிக்கை இதற்கு நல்ல உதாரணம்.

0 comments:

Post a Comment