இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைகளையக்கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடந்த அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 250 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நகல் எரிப்பு போராட்டம் நேற்று காலை நடந்தது.
இதுகுறித்து, ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் மயில் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கடந்த 1988ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு 7வது ஊதியக் குழுவை அமல்படுத்தி வெளியிட்ட அரசாணை 234ல் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவில்லை. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்திலேயே ரூ.5500 இழப்பு ஏற்பட்டது. இந்த ஊதிய இழப்பை சரிசெய்யக்கோரி எங்கள் அமைப்பின் சார்பில் கடந்த 9 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்நிலையில், தமிழகத்தில் 8வது ஊதியக் குழுவை அமல்படுத்தி வெளியிட்ட அரசாணை 303ல்கூட நாங்கள் கேட்ட ஊதியம் வழங்கவில்லை. இதிலும் ரூ.14 ஆயிரத்து 800 இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே கல்வித் தகுதி, ஒரே பணிநிலை கொண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 3 வகையான ஊதியம் வழங்கி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை எதிர்த்து எங்கள் அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டுகளில் 58 போராட்டங்களை நடத்தினோம். ஆனாலும் இதுவரை இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு சரி செய்யப்படவில்லை. எனவே எங்கள் அமைப்பின் சார்பில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அரசாணைகள் 234, 303 ஆகியவற்றை எரிக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்தோம். அதன்படி சென்னையில் இன்று சேப்பாக்கத்தில் அரசாணை எரித்தோம். இதன் காரணமாக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் இருக்க தயாராக இருக்கிறோம். அதனால் ஊதிய பிரச்னை தீர்க்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, தலைவர் மணிமேகலை, துணைத் தலைவர் அலோசியஸ் துரைராஜ், மாநிலச் செயலாளர் பிரசன்னா உள்ளிட்ட பலர் அரசாணைகளை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற 250 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூகநலக் கூடத்தில் அடைக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment