புயலால் போராட்டம் தள்ளிவைப்பு

புதுச்சேரி:புயல் எச்சரிக்கை காரணமாக, இன்று நடத்த இருந்த போராட்டத்தை, பொதுமக்கள் நலன் கருதி தள்ளி வைத்துள்ளதாக, புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் முன்வைத்துள்ள 33 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 15ம் தேதியன்று, அனைத்துப் பிரிவு ஊழியர்களும் விடுப்பு எடுத்து, பேரணியாக புறப்பட்டு, சட்டசபை எதிரில் மறியல் போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில், 'கஜா' புயல், புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

இதுபோன்ற சூழலில், பொதுமக்கள் நலன் கருதி, அனைத்துப்பிரிவு ஊழியர்களும் பேரிடர் கால நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நேரத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது முறையல்ல என்ற நிலைப்பாட்டோடு, இன்று 15ம் தேதி நடக்க இருந்த மறியல் போராட்டத்தை தள்ளி வைப்பது என்று அரசு ஊழியர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.எனவே, மறியல் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதை, அரசு ஊழியர்களும், உள்ளாட்சி, தன்னாட்சி, பொதுத்துறை மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஊழியர்கள் என அனைத்துப் பிரிவு ஊழியர்களும் பொதுமக்கள் நலன் கருதி ஏற்றுக்கொண்டு, புயல் நேரத்தில் பொதுமக்களின் நலன் காக்க பாடுபடுவோம் என்று அரசு ஊழியர் சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related Posts:

0 comments:

Post a Comment