''பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜனவரிக்குள் இலவச சைக்கிள் மற்றும், 'லேப்டாப்'கள் வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:பள்ளி கல்வியில், நாடே வியக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. கருவறையில், குழந்தையை தாய் பார்த்து கொள்கிறார்; வகுப்பறையில், குழந்தைகளை ஆசிரியர் பார்த்து கொள்கிறார். ஆசிரியர்களையும், குழந்தைகளையும், தமிழக பள்ளி கல்வி பார்த்துக் கொள்ளும். ஒன்று முதல், 5ம் வகுப்பு வரையில், ஒரு வகை சீருடையும்; 6 முதல், 8ம் வகுப்பு வரை, ஒரு வகை சீருடையும் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இரண்டு விதமான சீருடைகள், அரசால் வழங்கப்படும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிசம்பருக்குள் சைக்கிள்களும், ஜனவரியில், லேப் டாப்களும் வழங்கப்படும். மத்திய அரசே பாராட்டும் வகையில், ஐ.சி.டி., என்ற, கணினி வழி கல்வி திட்டத்துக்கு, டெண்டர் அறிவிக்கப்பட்டது. 9ம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான வகுப்புகளில், கணினி வசதி ஏற்படுத்தப்படும். 'அடல் டிங்கரிங்' ஆய்வகம், 621 பள்ளிகளில், தலா, 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.புதிய பாட திட்டம், எட்டு மாதங்களில், 1,200 ஆசிரியர்கள் வழியாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஐ.ஏ.எஸ்., அகாடமி உருவாக்கப்படும். பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கும் பாடம் கற்பிக்க, சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.அரசின் நிதியுதவியுடன், 50 மாணவர்கள் பின்லாந்துக்கும், தலா, 25 மாணவர்கள், கனடா, சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவுக்கும், கல்வி சுற்றுலா அனுப்பப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.சான்றிதழ் பெற 4 வாரம் அவகாசம்அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:பள்ளி கல்வியில் காலியாக உள்ள, சிறப்பாசிரியர் பணியிடத்துக்கான தேர்வில், தமிழ் வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் உள்ளதாக, தேர்வர்கள் கூறியுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் உள்ளவர்கள், அவரவர் படித்த பகுதியின் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாரிடம், நான்கு வாரங்களில், தமிழ் வழி சான்றிதழ் பெற அவகாசம் தரப்பட்டுள்ளது. இதில், சான்றிதழ் பெறாதவர்கள், பொதுவான பட்டியலில் தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment