'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆள் இல்லா விமானங்களை இயக்க பயிற்சி!’’ - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஆள் இல்லா விமானங்களை இயக்க பயிற்சி வழங்கப்படும். 100 அரசுப் பள்ளி மாணவர்கள், டிசம்பர் மாதத்தில் வெளிநாட்டில் கல்விச் சுற்றுலா செல்வதற்கான பணிகள் நடந்துவருகின்றன" என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.  

 

குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ``மிதிவண்டி, மடிக்கணினி, ஸ்மார்ட் கார்டு வழங்குதல் எனப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்திவரும் திட்டங்கள், டிசம்பர் மாதத்தில் முழுமையாக மாணவர்களுக்குச் சென்று சேரும். 

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அடுத்த கல்வியாண்டில் நான்கு சீருடைகள் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் டிங்கரிங் லேப் வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். இதன்மூலம் ஆள் இல்லா விமானங்கள் இயக்குவதற்குக் கற்றுக்கொடுக்கவும் ஏற்பாடு செய்துவருகிறோம். செல்போன் வழியே பாடங்களை எளிதாகக் கற்றுக்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. பல்வேறு வழக்குகளால் 3,000 பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்குவது காலதாமதமாகிறது. அடுத்த ஆறு மாதத்தில், அனைத்துப் பள்ளிகளும் கணினிமயமாக்கப்படும்.

1,200 ஆசிரியர்களின் உதவியுடன் எட்டு மாதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைத்திருக்கிறோம். இதில் இந்தியாவிலேயே இல்லாத வகையில் `QR  Code' முறையைக்கொண்டு உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகள் பயமின்றி பள்ளி வந்து செல்லும் வகையில், பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தி, பள்ளிக்கு வரும்போதும், வீடு திரும்பும்போதும் பெற்றோரின் மொபைலுக்குக் குறுஞ்செய்தியை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய, சி.எஸ்.ஆர் திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையும் பெற இருக்கிறோம். 

வரும் டிசம்பர் 30-ம் தேதி, பின்லாந்துக்கு 50, ஹாங்காங்குக்கு 25, சிங்கப்பூர், மலேசியாவுக்கு 25 என, 100 அரசுப்பள்ளி மாணவர்கள் வெளிநாட்டுக்குக் கல்விச் சுற்றுலா செல்ல இருக்கின்றனர். இதன்மூலம் வெளிநாட்டுக் கல்விமுறை, பண்பாடு மற்றும் கலாசாரத்தை அவர்கள் அறிந்துகொள்வர்.

Related Posts:

0 comments:

Post a Comment