நீண்ட விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள், 'டிஸ்மிஸ்'

சென்னை, அனுமதி இன்றி, விடுப்பு எடுக்கும் ஆசிரி யர்களையும், நீண்ட நாள் பள்ளிக்கு வராத ஆசிரியர்களையும், பணி நீக்கம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி கல்வி துறையில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் சிலர், உரிய அனுமதியின்றி, நீண்ட கால விடுப்பு எடுத்துவிட்டு, சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் பணியில் சேர்கின்றனர்.

நீண்ட விடுப்பில் இருக்கும் சிலர், திடீரென இறந்து விடுகின்றனர்.அவர்களின் குடும்பத்தினர், தங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பண பலன்கள் கேட்டு, அரசிடம் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், அரசு வேலையே செய்யாமல், ஒழுங்கீனமாக நடந்தவர்களுக்கு, எதற்கு நிதியுதவி என, நிதித்துறையில் கேள்வி எழுப்பப்படுகிறது. 'சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்டு, உரிய காலத்தில், ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது' என்றும், நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வி செயலகம், அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், கூறியிருப்பதாவது:அனுமதியின்றி விடுப்பில் உள்ளவர்கள் மற்றும் ஒழுங்கீன அரசு பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மீது, காலதாமதம் இன்றி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், வேலையே செய்யாதவர்களுக்கு, அரசின் இழப்பீடு வழங்க வேண்டிய தேவை ஏற்படாது. எனவே, வேலைக்கு வராதவர்கள் மீது, பணி நீக்கம் உள்ளிட்ட, ஒழுங்கு நடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment