' தண்ணீர் வசதி இல்லை’ - அமைச்சர் அன்பில் மகேஸிடம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முறையீடு

 1322801

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய அளவு தண்ணீர் வசதி இல்லை என்று ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சே.அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (அக்.7) ஆய்வு செய்தார். அப்போது அவர், பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காலை உணவு குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார்.


இது தொடர்பாக ஒரு மாணவரை, ஆங்கில புத்தகத்தை வாசிக்க சொல்லி கேட்டார். மற்றொரு மாணவரிடம், அ, ஆ சொல்ல சொல்லி கேட்டறிந்தார். பின்னர், மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கு வழங்கப்பட உள்ள பாட புத்தகம், புத்தக பை மற்றும் சீருடைகள் வரபெற்றுள்ளதை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கினார். மாணவ மாணவிகள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் அவர், மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், கழிப்பறைகளை சுத்தம் செய்து வைக்க வேண்டும், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என ஆசிரியர்களை அறிவுறுத்தினார்.


ஐஐடியில் நுழைய வேண்டும்: முன்னதாக, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு நடைபெறும் கட்டுமான பணியை பார்வையிட்டார். பின்னர், மாதிரி பள்ளியில் தங்கி படிக்கும் மாணவர்களிடம் உரையாடும்போது, “ஐஐடி, என்ஐடியில் படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கவனம் செலுத்தி படிக்க வேண்டும். ஆசிரியர்கள் அளிக்கும் பயிற்சியை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரும் நுழைய வேண்டும். உங்களை முன் உதாரணமாக கொண்டு மற்றவர்களும் படிக்க முன்வர வேண்டும். விளையாட்டு தனமாக இருக்கக்கூடாது.


சந்தேகத்துக்கு விடை காணுங்கள்: நீங்கள் நன்றாக முன்னேற்றம் அடைந்து, உங்களது ஆசிரியர்கள் மற்றும் மாவட்டத்துக்கு நல்ல பெயரை பெற்று தர முடியும். பெற்றோர் நமக்காக படும் கஷ்டங்களையும் மற்றும் ஆசிரியர்கள் உங்களது முன்னேற்றத்துக்கு தயாராக இருப்பதை மனதில் வைத்து படிக்க வேண்டும். பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை, வகுப்பறையில் உடனுக்குடன் கேட்டு தெளிவு பெற வேண்டும். படிப்பதில் சிரமப்படும் மாணவர்களையும் படிக்க உதவியாக இருந்து தேர்ச்சி பெற வைக்க வேண்டும்.


ஆசிரியர்களிடம் சந்தேகத்தை கேட்க கூச்சப்படும் மாணவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் நட்பாக பழகி, அவர்களது சந்தேகத்தை ஆசிரியர்கள் மூலம் தீர்க்க வேண்டும். நண்பனையும் உயர்த்தி விட வேண்டும்: நாம் உயர்ந்து போகும்போது, நமது நண்பனையும் கையை பிடித்து அழைத்து செல்ல வேண்டும். நன்றாக படிக்க மாணவர்களுக்கு வாழ்த்துகள்” என்றார்.


பின்னர் அவர் பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத்தை பார்வையிட்டார். அப்போது அவரிடம், “மாணவர்களுக்கு போதியளவு தண்ணீர் வசதி இல்லை. ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து, தங்களது சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும், பள்ளிக்கு அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவு நீர் வழிந்து பள்ளி வளாகத்தில் தேங்கி விடுகிறது” என ஆசிரியர்கள் கூறினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர், ஆரணி மற்றும் வந்தவாசியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்தார்.

0 comments:

Post a Comment