வாக்களிக்க "பூத் சிலிப்' போதும்:ராஜேஷ் லக்கானி தகவல்
11/03/2016
வாக்காளர்களுக்கு வழங்கப்படும்
புகைப்படத்துடன் கூடிய சீட்டே (பூத் சிலிப்) வாக்களிப்பதற்கு போதுமானது
என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளோருக்கு வண்ண வாக்காளர்
அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அட்டை இல்லாதவர்கள், வாக்குச்
சாவடி சீட்டினை (பூத் சிலிப்) வைத்து வாக்களிக்கலாம்.
இவை வாக்குப் பதிவின்போது மையங்களுக்கு வெளியே அளிக்கப்படும். இந்த ஒரு ஆவணமே போதுமானது.
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பாக வரப்பெற்றுள்ள 1,212 புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின்சாரம் திருடக் கூடாது: பொதுக்கூட்டங்களுக்கு மின்சாரத்தை திருடி பயன்படுத்தக் கூடாது.
இதுகுறித்து தெரியவந்தால் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தைக் காட்டிலும், குறைந்தது இரு மடங்கு மேல் கட்டணமாக வசூலிக்கப்படும்.
பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு இளநிலைப்
பொறியாளர் ஆய்வு நடத்தி, எந்த வகையில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது
என்பது குறித்து மின் வாரியத்துக்கு அறிக்கை அனுப்புவார்.
இணையதளம் மூலம் விண்ணப்பம்: பொதுக்கூட்டங்கள், தேர்தல்
அலுவலகம் திறப்பு ஆகியவற்றுக்கு இணையதளம் மூலமே விண்ணப்பிக்கும் நடைமுறை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அரசியல் கட்சியினர் 294 இடங்களில்
பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
மேலும், புதிதாக அலுவலகம் திறப்பதற்கு 8 மனுக்களும் இணையதளம் மூலம் செய்யப்பட்டுள்ளன.
சுவரொட்டிகள் அகற்றம்: வாகனச் சோதனைகள் வாயிலாக, இதுவரை
ரூ.37.99 லட்சம் பிடிக்கப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டுள்ள
93,756 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
அப்போது இடையூறு செய்ததாக மதுரையில் 40 வழக்குகளும், நீலகிரியில் 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.,
தபால் வாக்குகள்: தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு
அதிகாரிகள்-அலுவலர்களுக்கு தபால் வாக்குகளை தாமதமின்றி அளிப்பதற்கு
வசதியாக, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடனேயே கொடுக்கப்படும்.
இதேபோல், தேர்தல் பணியில் ஈடுபடும் தனியார்
நிறுவனங்களைச் சேர்ந்த 38 ஆயிரம் ஒளிப்பதிவாளர்கள், 10 ஆயிரம் ஓட்டுநர்கள்,
தன்னார்வலர்கள் 30 ஆயிரம் பேருக்கும் தபால் வாக்கு அளிக்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது என்றார்.
0 comments:
Post a Comment