தையல், ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படுவதில்லை என அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி விளக்கம் அளித்துள்ளார். அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி தேர்வுபட்டியலை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத்தேர்வு மற்றும் பதிவு மூப்பில் அதிக மதிப்பெண் பெற் றிருந்தும் ஓவியம், தையல் பாடத்தில் மேல்நிலை தேர்வில் (ஹையர் கிரேடு) தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் இல்லையெனக் கூறி 100-க்கும் மேற்பட்டோர் தகுதிநீக்கம் செயயப்பட்டு அவர்களின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதைத்தொடர்ந்து, பாதிக்கப் பட்ட தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு விளக்க மனுக்களை அளித்தனர். தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழை வழங்க முடியாது என்பதற்காகவாவது சான்று அளியுங்கள என்று கோரி கடந்த 2 நாட்களாக ஏராளமான தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்றிதழை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு தேர்வுத்துறையால் தனித்தேர்வர்களுக்கு மட்டுமே தொழில்நுட்பத்தேர்வுகள் கீழ்நிலை, மேல்நிலை (Lower Grade, Higher Grade) என்ற நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதனால், தேர்வர்கள் எந்த மொழியில் பயின்றார் என்ற விவரம் தெரியாததால் தேர்வர்களின் நலன் கருதி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே வினாத்தாளாக தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு (தையல், ஓவியம், இசை, நெசவு, அச்சுக்கலை) தேர்வுத்துறை சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. அரசு தொழில்நுட்பத் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் தேர்வுத்துறையால் வழங்கப்படுவதில்லை. எனவே, தமிழ்வழி சான்றிதழ் கோரி எந்தவொரு தேர்வரும் அரசு தேர்வுகள் இயக்ககத்தை அணுக வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வேண்டுகோள் தேர்வுத்துறையின் அறிவிப்பு குறித்து சிறப்பாசிரியர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வுபட்டியலில் இடம்பெறாமல் பாதிக்கப்பட்டுள்ள ஓவியம், தையல் படித்த தேர்வர்கள் கூறும்போது, "டிடிசி முடித்து தமிழ் வழி ஒதுக்கீட்டில் தேர்வுப் பட்டிய லில் இடம்பெற்ற தேர்வர்கள் யாரிடமிருந்து தமிழ்வழி சான்றிதழை பெற்றனர், ஒருவேளை தனியார் மையங்கள் அதுபோன்ற சான்றிதழை வழங்கியிருந்தால் அது எப்படி விதிமுறைப்படி செல்லும் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். சமர்ப்பிக்கவே முடியாத தமிழ்வழிச் சான்றிதழ் (ஓவியம், தையல் உயர்நிலை தொழில்நுட்ப தேர்வு) கேட்பதை விட்டுவிட்டு சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொடுத்திருந்த எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, டிடிசி தமிழ்வழி சான்றுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய தேர்வுபட்டியலை வெளியிட வேண்டும்" என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர்.தேர்வர்கள் எந்த மொழியில் பயின்றார் என்ற விவரம் தெரியாததால் தேர்வர்களின் நலன் கருதி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே வினாத்தாளாக தயாரிக்கப் பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது.
0 comments:
Post a Comment