ராணிப்பேட்டையில் இயங்கிவரும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி.
ராணிப்பேட்டையில் கடந்த 50 ஆண்டுகளாக மாணவிகள் சேர்க்கை இல்லாமல் மாணவர்கள் மட்டுமே படிக்கும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளியை இருபாலர் பயிலும் பள்ளியாக மேம்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 1926-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை ஆகிய 2 நகரங்களுக்காக இருபாலர் அரசுப் பள்ளி தொடங்கப்பட்டது. தொடர்ந்து, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வகுப்பறைக் கட்டடங்கள், விளையாட்டு மைதானத்துடன் மேம்படுத்தப்பட்ட பள்ளியாக மாற்றப்பட்டது. இப்பள்ளியில் 1,500 மாணவ, மாணவியர் வரை சேர்க்கை நடைபெற்று, மாநில, மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பள்ளியாகவும் உருவெடுத்தது.
இதைத் தொடர்ந்து 1970-ஆம் ஆண்டுகால கட்டத்தில் ராணிப்பேட்டை நகரில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே கிறிஸ்துவ அமைப்பின் சார்பில் 2 அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அப்போது ராணிப்பேட்டை சுற்று வட்டாரத்தில் ஆண், பெண் என தனித்தனியாக அரசுப் பள்ளிகள் இல்லாத சூழலில், அரசு நிதி உதவி பெறும் 2 தனியார் பெண்கள் பள்ளிகளில் பெண் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் முன்வந்தனர்.
அதன் காரணமாக பெரும்பாலான மாணவிகள் அரசுப் பள்ளியில் இருந்து அரசு நிதி உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தனர்.
அதன்பிறகு தற்போது வரை ராணிப்பேட்டையில் இயங்கிவரும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை இன்றி, மாணவர் மட்டுமே படிக்கும் இருபாலர் பள்ளியாக கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கையும் வெகுவாக குறைந்து தற்போது 400 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரித்தனர்.
தற்போது பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, தனது சொந்த செலவிலும், தனியார் சேவை அமைப்புகளின் நிதி உதவியாலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர உள்ளதாக உறுதியளித்துள்ளார். அதேநேரத்தில் மாநில பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட உள்ளதாக பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.அன்பழகன் தெரிவித்தார். மேலும், வரும் கல்வி ஆண்டில் மாணவிகளின் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இரு பாலர் கல்வித் திட்டத்தின் அடிப்படையே ஆணும், பெண்ணும் மாணவப் பருவத்தில் தோழமையோடு இணைந்து படித்து வளர வேண்டும் என்பதுதான். தமிழகப் பள்ளிகள் குறித்து எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்குப்படி, ஒரு பாலர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் காட்டிலும், இரு பாலர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் தலைசிறந்து விளங்குவதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
இப்பள்ளியில் மாணவியரின் சேர்க்கைக்கு மாவட்டக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 comments:
Post a Comment